இரத்த தானம்




 “இரத்ததானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததான விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள இரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம். நாம் அனைவரும் ரத்த தானம் செய்வோம். யாரோ ஒருவருக்காக நாம் இருப்போம்” என்று டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.


இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறர் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவதாகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் வரையில் இரத்தம் உள்ளது. அதில் ஒருவர் ஒரு நேரத்தில் 200 முதல் 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும். அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது.


 யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்???

18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்தத் தானம் செய்யலாம்.

அவர்களின் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.

ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம்.

உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


யார் ரத்தம் தரக்கூடாது???

டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள்,  சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.

மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அளிப்பது தவறு.

புகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது.

மாதவிடாய் தொடங்கி 5 நாட்கள் வரை ரத்தம் தரக்கூடாது.

கர்ப்பிணிகள், தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக்கூடாது.

எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.

இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


இரத்த தானம் அளிப்போர் நன்மை அடைகிறார்களா???

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் பயன்படுகிறது.

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.



அரசு சார்பில் ஆண்டுக்கு 350 ரத்த தான முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதுதவிர தினந்தோறும் சுமார் 30 - 40 தன்னார்வலர்கள் ரத்தத்தை அளிக்கின்றனர். 2018-ல் சுமார் 35,000 கொடையாளர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் அதை எதிர்கொள்ளத் தேவையான அளவிற்கு, அதிக அளவிலான இரத்த சேமிப்பு நம்மிடையே இருக்கும் வகையில் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்வதை ஒவ்வொருவரும் ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செயற்படுகின்றன. 


தாமாகவே முன்வந்து இரத்ததானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் இவ்வாறான இரத்ததான முகாம்கள் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


மழை மண்ணின் பயிர் காக்கும்

இரத்தம் மனிதனின் உயிர் காக்கும்

உயிர் பிழைக்க இரத்தம் கொடுங்கள்

இவ் உன்னத சேவையில் இணையுங்கள்

Comments