புனித ரமழான்

 

புனித ரமழான்


ரமழான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும்.
திருகுர்ஆன் அருளப்பட்ட இந்த ரமழான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள்  நோன்பு இருப்பது கடமையாகும். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் நோன்பானது மூன்றாவது கடமையாகும்..

இஸ்லாமிய நாட்காட்டியில் ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களை கொண்டு 354
அல்லது 355 நாட்களை கொண்டுள்ளது. உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் இந்த நாட்காட்டியை பயன்படுத்துகின்றனர் . இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜ்ரி, அதாவது இறைதூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும்.'ஹிஜ்ரத்' என்ற அரபி வார்த்தைக்கு இடம் பெயர்தல் எனப் பொருள்படும்.

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் முஹரர்ம், சஃபர், ரபி உல் அவ்வல், ரபி உல் ஆகிர் ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல் கஃதா, துல்ஹஜ் என்பனவாகும் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டதாக இருக்கும். சந்திரனின் ஓட்டத்தை வைத்தே ஒரு மாதத்தில் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவாகும். 2022 ஆம் ஆண்டு ஹிஜ்ரி1443 ஆக கொள்ளப்படுகிறது.

ரமழான் மாதத்தின் முதல் நாள் இரவில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. நரகத்திற்கு தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகின்றன. இந்தப் புனிதமிகு மாதத்தின் மிக முக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் 'சுபுஹுஸாதிக்' (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

""அல்லாஹ்வுக்காக நோன்பு நோட்போரின் முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்"" எனவே முஸ்லீம்கள் ரமழான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமழான் மாதத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட் டையாகவும் பொழுது போக்காகவும் கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும்.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமழான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். நிபந்தனை யாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிட வேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத்தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிட்படுத்த கூடாது. சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத்திறந்து விடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும். இனிப்பான பொருட்களை கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர்  அல்லது மற்றவைகளை கொண்ட நோன்பு திறக்கலாம்.

பருவமடைந்த இஸ்லாம் ஆண் , பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும் சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில்
விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவரகள் ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு
உணவளிக்க வேண்டும்.

• பைத்தியக்காரர்கள், நன்மை தீமை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு ஏதும் கொடுக்க வேண்டியதும் இல்லை.

• சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால்
அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது.
நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.

• பயணம் செய்வபவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர்
திரும்பிய பின் நோன்புகளை நோற்க்க வேண்டும்.

• கரப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக்கொண்டிருக்கும் பெண்
நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கு ஏதேனும் துன்பம்
வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது.
அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.

• மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு
நோற்க்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.

• "தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபததுக்குள்ளானவரகளை
காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த
நோன்பை நோற்க்க வேண்டும்.

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த
ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத்தகுதி: பெற்றுள்ளதாக திருகுர்ஆன் கூறுகிறது.

"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(திருகுர்ஆன் 97: 1-5)"

திருகுர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான் . மேலே நாம் குறிப்பிட்ட வசனத்தில் ரமழான் மாதத்தில்தான் திருகுர்ஆன் அருளப்பட்டது எனவும் இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமழான் மாதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அந்த இரவு ரமழானின் கடைசிப்பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் (21, 23, 25, 27 மற்றும் 29வது இரவுகளில்) அமைந்திருக்கும் என்று முஹம்மது நபி(ஸல்) அவரக்ள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக்கூறுகின்றார்.  அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றை கொண்டு பூமியில் இறங்குகின்றாரக்ள். அந்தச்சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமமறை குர்ஆன் சான்று பகிர்கின்றது. 

ஈத்-அல்-பித்ர் ரமழான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இதன் போது இஸ்லாமியர்கள் சடங்கு விரதங்களை கடைப்பிடிக்கின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, 10 ஆவது மாதமான ஷவ்வாலின் முதல் மூன்று நாட்களில் ஈத் கொண்டாடப்படுகின்றது.
உலகெங்கிலும் உள்ளமுஸ்லீம்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, பின் சுவையான ஈத் விருந்துக்குத் தயார் செய்கின்றார்கள். இந்த விருந்தில் இனிப்பு பலகாரங்கள் மட்டுமின்றி பானங்களும் இடம்பெறும்.

“நோன்பு பெருநாளை கொண்டாட இருக்கும் எமது உறவினர்களுக்கு தமிழறி குழாம் சார்பாக வாழ்த்துக்கள்"

Comments