தமிழும் அறிவியலும்

 
thamizhari
தமிழும் அறிவியலும்

தமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழி. அதனுள்‌ பல்வகை பல்வேறு இலக்கியங்கள்‌ எழுந்துள்ளன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கால அளவில்‌ வளர்ந்துவரும்‌ தமிழ்மொழியில்‌ அதன்‌ இலக்கியங்களில்‌ பல்வேறு பதிவுகள்‌ காணப்படுகின்றன. மொழியியல்‌, இலக்கணவியல்‌, இலக்கியவியல்‌, அழகியல்‌, அறவியல்‌, பண்பாட்டியல்‌, அறிவியல்‌ போன்ற பல்துறை சார்‌ பதிவுகள்‌ தமிழ்‌ இலக்கியங்களில்‌ பதிவு செய்யப்பெற்றுள்ளன. குறிப்பாக செம்மொழி இலக்கியங்கள்‌ காலத்தாலும்‌, கருப்பொருளாலும்‌, வெளிப்பாட்டுத்‌ தன்மையாலும்‌, பல்துறை இயல்‌ சார்‌ அறிவின்‌ பதிவுகளாலும்‌ தனித்திறம்‌ பெற்று விளங்குகின்றன.

முதலாவதாகத்‌ தமிழ்மொழி மிகுந்த பழமைச்‌ சிறப்பு வாய்ந்த மொழி. ஏனைய தற்கால இந்திய மொழிகளின்‌ இலக்கியங்களுக்கெல்லாம்‌ காலத்தால்‌ மிகவும்‌ முற்பட்ட, ஏறத்தாழ ஆயிரம்‌ ஆண்டுகளுக்கும்‌ அதற்கு மேலும்‌ முற்பட்ட பேரிலக்கியங்களைக்‌ கொண்டது. தமிழில்‌ மிகப்‌ பழம்பெரும்‌ நூல்‌ தொல்காப்பியம்‌. தொன்மைக்காலக்‌ கல்வெட்டுக்களிலிருந்து இந்நூலின்‌ பகுதிகள்‌ காலத்தால்‌ மிக முற்பட்டவை எனவும்‌, ஏறத்தாழ கி.மு. 200க்கு முன்பே இந்நூல்‌ எழுந்துள்ளது எனவும்‌ தெரிகிறது. பழந்தமிழரின்‌ பேரிலக்கியங்கள்‌ சங்க இலக்கியங்கள்‌ ஆகும்‌. அவை பத்துப்பாட்டும்‌ எட்டுத்தொகை நூல்களும்‌ பிறவும்‌ ஆகும்‌. அவை ஏறத்தாழ கி.பி. முதல்‌ இரு நூற்றாண்டுகளில்‌ எழுந்தவை எனக்‌ கொள்ளலாம்‌. அவை வடமொழியில்‌ காளிதாசரின்‌ பேரிலக்கியங்கள்‌ தோன்றுவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னமே தோன்றிவிட்டன. "இந்தியாவில்‌ முதன்‌ முதலில்‌ எழுந்த மதச்‌ சார்பற்ற பெருங்கவிதைத்‌ தொகுப்பு சங்க இலக்கியங்கள்‌ என்றால்‌ அது மிகையாகாது” என்ற ஜார்ஜ்‌ எல்‌.ஹார்டூவின்‌ கருத்துத்‌ தமிழ்ச்செம்மொழி இலக்கியங்களின்‌ தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

திருவள்ளுவர்‌ காலத்திற்குச்‌ சில ஆயிரம்‌ ஆண்டுகள்‌ முன்னர்‌ தொடங்கி, கிழக்கிந்திய கம்பெனி நம்நாட்டில்‌ காலூன்றிய காலம்‌ வரை தமிழர்‌ பல துறைகளிலும்‌ சிறந்தோங்கித்‌ தனி ஆதிக்கம்‌ செலுத்தி வந்துள்ளனர்‌. நதிகளின்‌ வெள்ளத்தைக்‌ கட்டுப்படுத்தவும்‌, பாசன முறை, நெருப்பை உண்டாக்கிக்‌ கட்டுப்படுத்தி பயன்படுத்தும்‌ திறன்‌, விலங்குகளை அடக்கியாண்டு அவற்றைப்‌ பணிகளுக்குப்‌ பயன்படுத்தும்‌ நுட்பம்‌, உலோகங்களைப்‌ பிரித்தெடுத்துப்‌ பயன்படுத்துதல்‌, உழவு, உழவுக்‌ கருவிகள்‌, பயணங்களுக்குச்‌ சக்கரங்கள்‌ கொண்ட வண்டிகளை உருவாக்குதல்‌, நெசவு, மண்பாண்டம்‌ வனைதல்‌, போர்த்துறை நுட்பங்கள்‌, கட்டிடக்‌ கலைகள்‌, நகரமைப்பு, அரசாட்சி முறை, நாவாய்‌ அமைத்தல்‌, செலுத்துதல்‌, மொழியியல்‌, மருத்துவம்‌, காலநிலை அறிதல்‌, வானவியல்‌ போன்ற துறைகளிலும்‌ இன்ன பிற துறைகளிலும்‌ நம்‌ முன்னோர்‌ ஆளுமை செலுத்தி வந்ததை அகழ்வாய்வுகள்‌ வாயிலாகவும்‌, இலக்கியங்களின்‌ வாயிலாகவும்‌ அறியலாம்‌.

எனவே செம்மொழி இலக்கியங்கள்‌ அறிவியல்‌ கண்‌ கொண்டு நோக்கத்தக்கனவாக விளங்குகின்றன. செம்மொழி இலக்கியங்களில்‌ பல்துறை சார்‌ அறிவியல்‌ செய்திகள்‌ காணப்படுகின்றன.

“மாயோன்‌ கொப்பூழ்‌ மலர்ந்த தாமரைப்‌

பூவொடு புரையும்‌ சீரும்‌ பூவின்‌

இதழகத்‌ தனைய தெருவும்‌, இதழகத்து

அரும்‌ பொகுட்டனைத்தே அண்ணல்‌ கோவில்‌”

என்ற பரிபாடல்‌ அடிகளில்‌ தமிழர்‌ கட்டடக்‌ கலையின்‌ நுணுக்கம்‌ பெறப்படுகிறது. தாமரைப்‌ பூவைப்‌ போல மதுரை மாநகர்‌ அமைந்திருந்தது என்பது இவ்விலக்கியம்‌ காட்டும்‌ பதிவாகும்‌. தாமரைப்‌ பூவின்‌ இதழ்கள்‌ போல தெருக்கள்‌ அமைந்திருந்தனவாம்‌. அதாவது ஊரின்‌ மையப்பகுதியில்‌ ஆலயம்‌ அமைந்திருக்க அது பூவின்‌ பொகுட்டாக அமைய, அதனை மையப்படுத்தி நெருக்கமாகத்‌ தெருக்கள்‌ அமைந்திருந்தன என்பது இதன்வழி பெறப்படும்‌ நகரக்‌ கட்டமைப்பாகும்‌.


“இட்டிகை நெடுஞ்சுவர்‌ விட்டம்‌ விழ்ந்தென

மணிப்‌ புறாத்‌ துறந்த மரஞ்சோர்‌ மாடத்து”

என்ற அகநானூற்றுக்‌ குறிப்பின்படி, செங்கற்‌ கோயில்‌ சங்க காலத்தில்‌ கட்டப்பட்டிருந்தது என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு இன்றைக்கு நவீனமாக வளர்ந்துள்ள கட்டடக்‌ கலையின்‌ உயரத்திற்குத்‌ தமிழர்கள்‌ அன்றே அடிக்கல்‌ நாட்டியுள்ளனர்‌ என்பதை உணரமுடிகின்றது.


“மீன்தேர்‌ கொட்பின்‌ பணிக்கயம்‌ மூழ்கிச்‌

சிரல்‌ பெயர்ந்தன்ன நெடுவள்‌ ஊசி

நெடூவசி பரந்த வடுவாழ்‌ மார்பு "

என்ற பதிற்றுப்பத்து அடிகளில்‌ மீன்கொத்திப்‌ பறவை நீரில்‌ விழுந்து விரைந்து எழுந்து செல்வதைப்‌ போல கிழிந்த தோல்‌ பகுதியானது ஊசி கொண்டு தைக்கப்பெற்றநிலை காட்டப்பெறுகிறது. இவ்வகையில்‌ அறுவை சிகிச்சையின்‌ முன்னோடியாகத்‌ தமிழர்‌ விளங்கினார்‌ என்பது தெரியவரும்‌.

சங்க இலக்கியங்களில்‌ வானவியல்‌ செய்திகள்‌ பெருமளவில்‌ காணப்படுகின்றன. நெடுநல்வாடை போன்ற சங்க இலக்கியங்களில்‌ ஆடு போல தோற்றம்‌ கொண்ட மேட உடுக்கணமே முதலாவதாகச்‌ சுட்டப்படுகிறது. ஆடு என்ற பொருள்‌ தரும்‌ ஏறு என்னும்‌ பழந்தமிழ்ச்‌ சொல்லே ஏரீஸ்‌ என்றானது.


“பங்குனி உயர அழுவத்துத்‌

தலைநாள்‌ மீன்‌ நிலை திரிய

நிலைநாள்‌ மீன்‌ அதன்‌ எதிர்‌ ஏர்தர

தொல்நாள்மீன்‌ துறைபடிய”

என்ற பாடல்‌ நட்சத்திரங்களின்‌ இயக்கங்கள்‌ பற்றிக்‌ குறிக்கிறது. தலைநாள்‌ மீன்‌, நிலைநாள்மீன்‌, தொல்‌ நாள்மீன்‌ என்று தமிழர்கள்‌ விண்மீன்களுக்குப்‌ பெயர்‌ கட்டியுள்ளனர்‌.


“விசும்பு நீத்தம்‌ இறந்த ஞாயிற்று

பசுங்கதிர்‌ மழுகிய விந்து வாங்கு அந்தி”

என்ற பாடலில்‌ அந்திமாலையின்‌ வருகை அறிவியல்‌ கண்‌ கொண்டுப்‌ பதிவு செய்யப்பெற்றுள்ளது. 

இவ்வாறு பல்வேறு வானியல்‌ செய்திகள்‌ செம்மொழித்தமிழ்‌ இலக்கியங்களில்‌ பதிவாக்கம்‌ பெற்றுள்ளன.


“காடு கொன்று நாடூ ஆக்கி

குளந்தொட்டு வளம்‌ பெருக்கிப்‌

பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக்‌

கோயிலோடு குடிநிறீஇ

வாயலோடூ புழை அமைத்து

ஞாயில்‌ தொறும்‌ புதை நிறீஇப்‌"

என்ற நிலையில்‌ நாடு ஆக்கிய நன்முறை காட்டப்படுகிறது. இன்றைய நகரமைப்புத்‌ திட்டங்களுக்குத்‌ தமிழன்‌ போட்டுத்‌ தந்த முந்தையத்‌ திட்டம்‌ இதுவாகும்‌. இவ்வகையில்‌ நகர்‌ அமைப்பு அறிவியலும்‌ தமிழர்‌ கொடையாக விளங்குகிறது.


உணவியலும்‌ தமிழர்க்கு உரியதாக இருந்துள்ளது.

“முள்ளரித்து இயற்றிய வெள்ளரி வெண்‌ சோறு

வண்டுபடக்‌ கமழும்‌ தேம்பாய்‌ கண்ணித்‌”

என்ற நிலையில்‌ மருத நில உணவினைக்‌ காட்டுகிறது பத்துபாட்டு நூல்களில் ஒன்றான மலைபடுகடாம்‌ நூல்.


“வினைபுனனம்‌ நிழத்தலின்‌ கேழல்‌ அஞ்சிப்‌

புழைதொறும்‌ மாட்டிய இருங்கல்‌ அரும்பொறி

உடைய ஆறே நள்ளிருள்‌ அலரி

விரிந்த விடியல வைகினிர்‌ கழமின்‌” 

என்ற பாடலடிகள்‌ பன்றியை விரட்ட கற்பொறியைப்‌ பயன்படுத்திய திறத்தைக்‌ காட்டுகிறது. விலங்குகள்‌, பறவைகள்‌ போன்றவற்றின்‌ இயல்புகளைக்‌ காட்டும்‌ விலங்கறிவியல்‌ இன்று வளர்ந்துள்ளது. தமிழர்கள்‌ அன்றே விலங்குகள்‌, பறவைகள்‌ ஆகியவை குறித்து அறிந்து அவற்றின்‌ இன்றியமையாமையைத்‌ தம்‌ பாடல்களில்‌ பதிவு செய்துள்ளனர்‌.


“மடநடை ஆமான்‌, கயமுனிக்‌ குழவி

ஊமை எண்கின்‌ குடா அடிக்‌ குருளை

மீமிசை கொண்ட கவர்பரிக்‌ கொடுந்தாள்‌

வரைவாழ்‌ வருடை வன்தலை மாத்தகர்‌

அரவுக்குறும்பு எறிந்த சிறுகண்‌ தீர்வை

அளைச்‌ செறி உழுவை கோள்உற வெறுத்த

மடக்கண்‌ மரையான்‌ பெருஞ்செவி குழவி

அரகு விரிந்தன்ன செந்நில மருங்கின்‌

பரற்ற வழ்‌ உடும்பின்‌ கொடுந்தாள்‌ ஏற்றை"

என்ற நிலையில்‌ விலங்குகளின்‌ குட்டிகளை வகைப்படுத்தி, அவற்றின்‌ வரிசையை அமைத்துக்‌ காட்டுகிறது மலைபடுகடாம்‌ நூல்.


இவ்வாறு பல்வேறு அறிவியல்‌ துறைகளின்‌ முன்னோடி இலக்கியங்களாக செம்மொழி இலக்கியங்கள்‌ விளங்குகின்றன என்பதை உணரமுடிகின்றது. 

இவ்விலக்கியங்கள்‌ காட்டும்‌ அறிவியல்‌ செய்திகளை தமிழரின்‌ அறிவியல்‌ சிந்தனைகள்‌ என்பதாகவும்‌, மனித குலத்தின்‌ ஆரம்ப கால அறிவியல்‌ பங்களிப்புகள்‌ என்பதாகவும்‌ உலகம்‌ ஏற்றுப்‌ போற்றும்‌ அளவிற்கு முன்னிறுத்துவது என்பது தற்போதைய தேவையாகும்‌.

Comments

  1. Top-Tier Titanium Cartilage Earrings - Titsanium Art
    Top-Tier Titanium raft titanium Cartilage apple watch aluminum vs titanium Earrings titanium alloy nier replicant (Top-Tier) Titsanium Art, Titanium Art. Premium Titsanium Art, Titanium Art. $0.00. $5.00. $5.00. mens titanium necklace $5.00. $5.00. $5.00. micro touch hair trimmer

    ReplyDelete

Post a Comment