தமிழ் விதைகள்

thamizhari
தமிழ் விதைகள்

தமிழ் மொழி சிறப்புற்று விளங்க பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பெரியோர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அவர்களில் சிலரை பற்றி அறிந்து வைத்திருப்பது எமக்கும் பெருமையாகும்.


வள்ளுவர்


'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு ’ 


என்று தொடங்கி ஈரடிக் குறளில் உலக தத்துவங்கள் அனைத்தையும் 

‘திருக்குறள்’ எனும் உன்னத படைப்பில் எடுத்துக்காட்டியுள்ளார் திருவள்ளுவர். இனம், மதம், மொழி, தேசம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலான திருக்குறளை இயற்றி தமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்தவர் . உலகளாவிய தத்துவங்ளை கொண்ட திருக்குறளைப் படைத்து உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை பெறச்செய்துள்ளார்.


இவர் உலக மக்களால் தெய்வப்புலவர், நாயனார், தேவர், பெருநாவலர், பொய்யாமொழிப்புலவர் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார். திருவள்ளுவரது பெயர், பெற்றோர் மற்றும் பிறப்பிடம் ஆகியன இன்று வரை உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் இவர் கி.பி 2ம் நூற்றாண்டில் பிறந்திருக்கக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் சிலர், தற்போதைய சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். மார்கசெயன் என்பவர்  திருவள்ளுவரின் கவித்திறனைக் கண்டு மகிழ்ந்து தனது மகளான வாசுகியை மணமுடித்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது.


"வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு'

என்று பாரதியும் "அணுவைப்பிளந்து ஏழ்கடலை புகுத்தி குறுகதரித்தக்குறள்"  என்று ஒளவையும் போற்றும் அளவிற்கு தமிழ் நன்நெறி நூலாக விளங்கும் திருக்குறளை சிறப்பிக்கும் முகமாக உலகப்பொதுமறை, முப்பால், ஈரடிநூல், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை போன்ற பெயர்களால் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. திருக்குறளின் உன்னதத்தினை உணர்ந்த "ஜி.யு.போப் “என்பவர் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் திருக்குறள் தவிர்ந்த மருத்துவம் பற்றிக்கூறும் “ஞான வெட்டியான்”, ” பஞ்ச ரத்னம்” எனும் நூல்களையும் ஜோதிடம் பற்றி கூறும் “சுந்தர சேகரம்” எனும் நூலையும் இயற்றியுள்ளார். திருக்குறளின் பெருமை இவ் யுகத்திற்கு மட்டுமன்றி வருகின்ற யுகங்களிலும் பேசப்படுவதற்காக நாசாவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. “திருக்குறளை படிக்காத தமிழன் இல்லை” என்று கூறும் அளவிற்கு தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, தன் அறிவாலும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக தமிழருக்கு பெருமை தேடித் தத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.


மகாகவி பாரதியார்


"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்

தொழுது படுத்திடடி பாப்பா"


என்று குழந்தைகளுக்கு கூட தமிழின் பெருமையை கவிதை மூலம் கூறிய வள்ளல் அவன். கவிப்பா வரிகளில் வெளிச்சமிட்டு காட்டும் அவருடைய சிந்தனைகளும், தமிழ் மொழியின் அழகும். அவர் தான் சுப்பிரமணியன் எனும் இயற்பெயரை கொண்ட மகாகவி பாரதியார்.


சின்னச்சாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் 1882 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் எட்டயபுரத்தில் மகனாக அவதரித்தார். சிறுவயது முதல் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவரின் கவிபாடும் ஆற்றல், புலமையை பாராட்டி 'பாரதி'   என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுரத்து மன்னன். மேலும் இவரை முண்டாசுக் கவிஞன், சக்திதாசன், பாரதியார், மகாகவி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

இவர் தனது 14 வது வயதில் 7 வயது மட்டுமே நிரம்பிய செல்லம்மாவோடு திருமணம் நடந்தது. இது போன்ற செயல் அவருக்கு மிக்க கோபத்தை ஏற்படுத்தியது. இது போன்ற தவறு இனி ஒரு போதும் நடக்க கூடாதென்று கவிதை மூலம் தவறுகளை சுட்டிக்காட்டினார்.

பாரதியார் எனும் மகாகவி பல மொழிகளை கற்றிருப்பினும்,

 "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

  இனிதாவது எங்கும் காணோம்"   என்று அழகாகக்  கூறினார்.


இவர் எட்டயபுர அரசவையில் கவிஞராகவும் பணியாற்றினார். அது மட்டுமன்றி பத்திரிகையாளராகவும் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார்

இவர் சுதந்திர பேராட்ட காலத்தில் கவிபாடல்களை பத்திரிகையை பயன்படுத்தி காட்டு தீயாய் பரவவிட்டார். இதன் விளைவாக அவர் சிறையில் சில காலம் இருக்கலனார். விடுதலை பெற்ற பின் அவர் வேறு ஊரில் வசித்து வந்தார். இதன் போது அவர் வறுமையில் வாழலானார். அவ் வறுமையிலும் தன்மானத்தோடு வாழ்ந்தார். இவருடைய வாழ்கை காலத்தில் ஒருமுறை மகாத்மா காந்தியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவை இவரால் இயற்றப்பட்டது. இது தவிர தேசிய கீதங்கள், பகவத்கீதை முன்னுரை, சந்திரிகையின் கதை இப்படி பல படைப்புக்களை இயற்றியுள்ளார்.

இவர் பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இவரை 1921 ஆம் ஆண்டு பார்த்த சாரதி கோவிலில் யானை மிதித்தது. இதன் விளைவால் தன் உயிரை நீத்தார். அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு இருபதிற்கும் குறைவானவரே இருந்தார்களாம்.


அப் பேர் வள்ளல் வாழ்ந்தது  39 வருடங்களாக இருப்பிலும்  அவருடைய எழுத்திழைகள் வழங்கிய தமிழ் சுவை மிகப் பெரியதே!!


பெருந்தலைவர் காமராஜர் 


நாட்டுப்பற்று, தன்னலமின்மை, அச்சமின்மை, எளிமை, கடுமையான உழைப்பு,நேர்மை ஆகியவற்றின் இமயமாக திகழ்ந்து தாய் நாட்டின் வளர்ச்சிக்கு பணி செய்வதற்காக தனது வாழ் நாள் முழுவதையும் ஒப்படைத்த தியாகத்தின் ஒளி விளக்குத்தான் பெருந்தலைவர் காமராஜர். இவர். பகைவர்களும் மதிக்கும் பண்புள்ளவராகவும், படிக்காத  மேதையாகவும், கல்வியின் நாயகனாகவும் மனிதநேயத்தின் மறு உருவமாகவும் திகழ்ந்தார்


தமிழக அரசியல் வரலாற்றிலே ” பொற்காலம்என இவர் முதலமைச்சராக ஆண்ட 9 ஆண்டுகளே போற்றபடுகிறது


இவர் 1903ம் ஆண்டு ஜூலைமாதம் 18ம் திகதி, இந்தியாவில் தமிழ் நாட்டு மாநிலத்திலுள்ள விருது நகரில் குமாரசாமி நாட்டாருக்கும் சிவகாமி அம்மாவுக்கும் மகனாக பிறந்தார்.இவரது இயற்பெயர் காமாஸி. இவரது தாயார் இவரை மிகுந்த நேசத்துடன் ராஜா என்று அழைப்பார். ஆகவே காலப்போக்கில் (காமாஸி + ராஜா) காமராஜார் என்று பெயர் பெற்றது


சிறு வயது முதல் சுதந்திர போராட்டத்தலைவர்களின் பேச்சுக்களால் கவரப்பட்ட காமராஜர் பின்னணியில் தன்னை முழுவதுமாக சுதந்திர பேராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டதோடு உப்பு சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாக்கிரகம், நாக்யூர் சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்களில் பங்கேற்ற காமராஜர் தனது வாழ்நாளில் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார்

1953ம் ஆண்டு முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். தன் தந்தை இறப்பின் பின் தனது குடும்பசூழல் காரணமாக தனது கல்வியை தொடர முடியாத நிலையை எண்ணியும், கல்வி தான் நாட்டை வளமாக்கும் என்பதை ஆழமாக நம்பிய காமராஜர் ராஜாஜி ஆட்சிக்காலத்தில் மூடப்பட்ட 6000 பாடசாலைகளை திறந்ததோடு மட்டுமல்லாது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்பப்பள்ளி, மூன்று கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலை பள்ளி, ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு உயர் நிலை பள்ளி இருக்கவேண்டும் என்ற திட்டம் வகுத்து மேலும் 17000 பள்ளிகளை திறந்தார்.

இவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டபோதிலும் வறுமை காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு வராததை கண்டு மனம் நொந்த காமராஜர் அவர்களை வரவழைப்பதற்காக இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை பல அரசியல் அதிகாரிகளின் எதிர்ப்புகளை மீறி தொடங்கிவைத்தார்


கல்வியில் மாத்திரமின்றி தொழில் துறையின் வளர்ச்சிக்காக நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம், சேலம் இரும்பு ஆலை, கிண்டி டெலிபிரிண்டர், பெரம்பூர் ரயில் நிலையம் போன்ற பல நிறுவனங்களை தொடங்கி தொழில் வளர்ச்சியில் வட மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை தமிழகத்திற்கு பெற்று கொடுத்தார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது நீர் என்பதை தெளிவாக அறிந்த  காமராஜர் மணி முத்தாறு, வைகை, சாத்தனூர்,கிருஷ்ண கிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்றினார்


திருமணம் செய்து கொள்ளாமல் தனக்கென்று அல்லாமல் வாழ்நாள் முழுவதுமாக நாட்டுக்கு அர்ப்பணித்த காமராஜர் 1978ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி காலமானார்


முதலமைச்சராக இருந்த போதிலும் இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போதிலும் வாடகை வீட்டிலேயே வசித்து வந்ததுடன் இறக்கும் போது அவரிடம் இருந்த சொத்துக்களாக சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள்,150 ரூபாய் பணம் என்பனவே. இதன் மூலம் எளிமையின் மறு உருவமாக காமராஜர் திகழ்ந்தார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் கதாநாயகர்களை போல இல்லாமல் நிஜ வாழ்க்கையில் உண்மையான கதாநாயகனாக வாழ்ந்து காட்டிய காமராஜரை மக்கள் தென்னாட்டுக்காந்தி, படிக்காத மேதை, கர்ம வீரர், பெருந்தலைவர், கல்விகண் திறந்த காமராஜர் என போற்றினார்கள். காமராஜரின் உண்மையான செயல்களுக்காக 1976ம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான ” பாரத ரத்னாவிருது வழங்கி கெளரவித்தது


"உன்னை போல அரசியல்வாதி உலகில் இல்லை, நிச்சயமாக உன்னை தவிர உனக்கு நிகர் வேறு யாருமில்லை. " என்ற வரிகள் காமராஜருக்காக எழுதப்பட்டது என்று கூறினால் மிகையாகாது.



ஔவையார்


"அறம் செய்ய விரும்பு

 "ஆறுவது சினம்......" 


இவ்வரிகளை பார்த்தவுடன் நமது ஆரம்ப காலமே நினைவில் வருகின்றது. நாம் எழுதப் படிக்க ஆரம்பித்தபோது ஆத்திசூடியை கற்றுத்தராத ஒரு குருவை நாம் காண இயலாது. இதனை பூகோளத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஔவைப் பிராட்டி என்பது அனைவரும் அறிந்ததே.


ஆனால் ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் வெவ்வேறுபட்ட காலகட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகின்றனர். முதன்முதலாக சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் தன் நண்பனான தொண்டை நாட்டு மன்னன் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டார். அவ் நெல்லிக்கனி நீண்ட நாள் வாழ்வதற்கான ஓர் அதிசய கனியாகும் இவ்வாறான விடயங்களை வரலாறு கூறுகின்றது.

முதலாம் காலகட்டத்தில் வாழ்ந்த ஔவையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இக்காலத்தில் அரசர்களோடு நட்புறவு கொண்டு வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது காலகட்டத்தில் வாழ்ந்த ஔவையார் பக்தர்களோடு வாழ்ந்தார் என்று குறிப்பிடப்படுகின்றது. அவர் விநாயகர் பற்றிய பாடல்களைப் பாடியதற்காக  கூறப்படுகின்றது.

மூன்றாவது காலகட்டத்தில் வாழ்ந்த ஔவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். அவர் இக்காலத்தில் குழந்தைகளோடு வாழ்ந்தார். குழந்தைகளுக்கான நூல்களை பாடினார்.

நான்காவது காலகட்டத்தில் வாழ்ந்த ஔவையார் தனிப் பாடல்களைப் பாடியுள்ளதாகவும், முக்கியமாக முருகனுக்காக பாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவர் பாடிய கொன்றைவேந்தன் சிறிய வாக்கியங்களை கொண்டதுடன் இதில் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலமும் நன்று..."



மூதுரை என்னும் நூலில் வாக்குண்டாம் எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்துடன் 31 வெண்பாக்களை உள்ளடக்கியுள்ளது. இது பொதுவாக நான்கு வரிகளுடன் கூடியதாக உள்ளது. உதாரணமாக   ஒரு பாடலை எடுத்து பார்ப்போமானால்,

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத 

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர்.


இதன் பொருள் 

நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்களுக்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில்  பொறித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனை தண்ணீரில் எழுதும் எழுத்து போல மறைந்து விடும்.

ஔவைப் பிராட்டி இவ்வாறு பல நூல்களை எழுதியுள்ளார்நல்லொழுக்கத்துடன் வாழ்வது எவ்வாறு என்று பாடல் மூலம் அழகாக கூறி உள்ளார் இவர். குழந்தைகளுக்கு கூட அழகிய வரிகளில் விளங்கும் மொழிநடையில் எடுத்துக் கூறியுள்ளார்.



பாரதிதாசன்

"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவை சொட்டுப் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் "பாவேந்தர் பாரதிதாசன்" அவர்கள். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாகக்கற்று , தமிழ் மொழிக்கு அருட் தொண்டாற்றியவர் பாரதி தாசன் அவர்கள்.

பாரதி தாசன் அவர்கள் தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 1891 இல் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.பாரதிதாசனின் இயற்பெயர் "சுப்புரத்தினம்" ஆகும். இவர் தனது தந்தையின் மீது கொண்ட பாசத்தினால் அவரது பெயரின் முதற்பாதியில் கனகசபை என்கிற அப்பாவின் பெயரை சேர்த்து "கனக சுப்புரத்தினம்" என்று சேர்த்துக் கொண்டார்.

இவர் தமிழ் இலக்கிய வார்த்தை மொழிகளின் சொந்தக்காரரான பாரதியார் மீது கொண்ட ஈர்ப்பினால் தனது பெயரினை "பாரதி தாசன்" என்று மாற்றிக் கொண்டதோடு மட்டுமன்றி மானசீகக் குருவாக சுப்பிரமணிய பாரதியாரைக் கருதினார். 

இவரது காலத்தில் புதுவையில் ஆங்கிலேயர் ஆதிக்கம் இருப்பதால் அவர் பிரேஞ்சு பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை தொடங்கினார்.இருப்பினும் அவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார்.

பிறகு அவரது கல்லூரி படிப்பில் தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்து இளங்கலை தமிழ் பயின்று பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பின்பு காரைக்காலில் உள்ள அரசுக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார்.இவர் 1920 ஆம் ஆண்டு பழனி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் மன்னர்மன்னன் என்ற மகனும் சரஸ்வதி, வசந்தா ,ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

தமிழ் மொழிக்காக தனது தொண்டினை ஆற்றிய அவர் அரசியலிலும் தனது தொண்டினை ஆற்ற தவறவில்லை.1954 ஆம் ஆண்டு புதுவைச் சட்ட  மன்றத் தேர்தலில் நின்று தனது முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். எண்ணற்ற படைப்புக்களை அவர் தமிழ்மொழிக்காக வழங்கி இருந்தாலும் சாதிமறுப்பு ,கடவுள்  எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புக்களை வெளியிட்டார்.

அவற்றுள் மிகச்சிறந்த படைப்புகளாவன பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்து, குறிஞ்சித் தட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழ் இயக்கம், இசையமுது, குயில், தமிழச்சியின் கத்தி, பாரதி தாசன், ஆத்திசூடி, பெண்கள் விடுதலை, பிசிராந்தையார் மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் நூதிய முத்து, முல்லைக்காடு, கலை மன்றம் விடுதலை வேட்டை விளங்குகின்றன.


இவரது பாடல்களில் தமிழரின் வீரத்தைக்கூறும் "தூங்கும் புலிகள் பறை கொண்டெழுப்பினோம்" என்ற பாடலும் அடிமைப்பட்டு கிடந்த அடிநிலை மக்களின் வாழ்வில் எழுச்சிக்காக "கழுயிடை ஏறிய சுளையும்" என்ற பாடலும் சிறப்பு வாய்ந்தவை


பாரதிதாசன் அவர்கட்டு பெரியார் "புரட்சிக்கு கவிஞர்" என்ற பட்டமும் அறிஞர் அண்ணா "புரட்சிக்கவி" என்ற பட்டமும் வழங்கினர்இவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு "பாரதி தாசன் விருதினை" வழங்கி வருகின்றது


1946ல் "அமைதி ஊமை" என்ற நாடகத்திற்காக இவர் "தங்கக்கிளி" பரிசும் 1970 ல் "பிசிராந்தையர்" நாடகத்திற்காக "சாஹித்து அகாடமி" விருதும் கிடைக்கப்பெற்றார்


எழுத்தாளர் திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல் வாதி என்று பன்முகம் கொண்ட பாரதி தாசன் அவர்கள் ஏப்ரல் மாதம் 21  ஆம் திகதி 1964  ல் இயற்கை எய்தினார்


இன்றைக்கு  தமிழும் நம் கலாச்சாரமும் ஓரளவேனும் தலைநிமிர்ந்து நிற்கின்றதென்றால் பாரதி தாசன் போன்ற ஒப்பற்ற எழுத்தாளர்களுடைய தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பணியும் என்றால் அது மிகையில்லை


கப்பலோட்டிய தமிழன்


இவர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகநாதபிள்ளை மற்றும்  பரமாய்அம்மாள் என்பவருக்கும் மகனாக 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி மூத்த மகனாக அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ..சிதம்பரப்பிள்ளை ஆகும்.

இவருக்கு படிப்பதில் மிக்க ஆர்வம் இருந்தது இருப்பினும்  சிறுவயதில் தன் பாட்டியிடமும், பாட்டனாரிடமும் மற்றும் தாத்தா போன்றோரிடம் இருந்து ஆரம்பக் கல்வியைப் பெற்றார். அதன்பின்னர் தனக்குத் தெரிந்த ஒரு அரசாங்க அதிகாரி மூலம் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார் பிறகு தனது 14ம் வயதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கல்வி கற்றார்.

இவர் தன் படிப்பை முடித்ததும் தாலுகா அலுவலகத்தில் சில காலம் பணியாற்றினார். அதன் பின்னர் தன் தந்தையின் சொற்படி சட்டப்படிப்பை மேற்கொள்ள திருச்சிக்கு சென்று  குற்றவியல் மற்றும் உரிமையில் ஆகிய பிரிவில் சட்டத்தில்   தேர்வடைந்தார்.

இவர் தன் சட்டப்படிப்பை முடித்த பின்  வழக்கறிஞராக சொந்த ஊரில் ஏழைகளுக்காக இலவசமாகவும் சிறப்பாகவும் வாதாடி வெற்றி பெற்றார்.

இவர் எப்போது சென்னை சென்றாலும் அங்கு மகாகவி பாரதியாரை சந்திப்பது  வழக்கமாக இருந்தது. அத்துடன் இவர்கள் எப்பொழுதும் நாட்டினை பற்றிய அதிகமாக பேசுவார்கள்.

அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்வதற்காக இந்தியாவிற்குள் நுழைந்து பின் நாட்டை ஆளத்துவங்கியதும் அனைவருக்கும் அறிந்த விடயம் ஒன்று. இதனை தடுத்து நிறுத்த சிதம்பரப்பிள்ளை ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக கப்பல் போக்குவரத்தை தொடங்கினார் . ஆரம்பத்தில் அவர் வாடகைக்கு எடுத்து நடத்தியதால் அதனை  தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஆகவே சொந்த கப்பல் வாங்குவதற்காக தொழிலதிபர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் போதுமான பணத்தை பெற்றுக்கொண்டு அதன்பின் சொந்தமான கப்பலை வாங்கி அதனை தூத்துக்குடி முதல் கொழும்பு வரை இயக்கினார்.

மக்கள் அனைவரும் தங்களது வியாபார சரக்குகளை சுதேசி நிறுவனம் இயக்கிய கப்பலில் கொண்டு வர ஆரம்பித்தனர். இதனால் ஆங்கிலேயர்களுக்கு பெரும் நஷ்டம்  ஏற்படவே ஆங்கிலேயர்கள் சுதேசி கப்பலின் மேல் பொய் வழக்கை தொடுத்தனர். அதிலும் தனது வாதத் திறமை மூலம் வெற்றி பெற்றார்.

இதன் பின்னர் தூத்துக்குடியில் ஆங்கிலேயர்களால் நடாத்தி வந்த நூற்பாலை தொழிற்சாலையில் தமிழக மக்களுக்கு மிகக் குறைந்த கூலியில்  வேலை வழங்குவதாகவும் அத்துடன் மனிதநேயம் இன்றி வேலை வாங்குவதாகவும் அறிந்தார். அவர்களை ஒன்று திரட்டி சரியான ஊதியத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டனர்.

..சிதம்பரம் பிள்ளையையும் அவரது நண்பரான சுப்பிரமணிய சிவா அவர்களையும் உரையாற்றுவதற்காக ஒரு விழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் உரை ஆற்றினால் ஆங்கிலேயர்களுக்கு பாதமாக முடியும் என்று நினைத்து அவரை கைது செய்வதாக எண்ணி  இருக்கையில் இச்செய்தியைக் அறிந்த மக்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்வினையே திருநெல்வேலி எழுச்சி என்று சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவருக்கு சிறை தண்டனை காலம் குறைக்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். மேலும் மக்களுக்காக தனது போராட்டத்தை நடத்தி வந்தார். அதன் பின்னர் 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி இவர் தன் உயிரை நீத்தார்.

இவரின் நினைவுச்சின்னமாக அவர் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற அதில் நூலகம் மற்றும் அவருடைய புகைப்படங்கள், குறிப்புகள் அங்கே எழுதப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு இவருடைய பெயரை சூட்டியுள்ளது.

..சிதம்பரம் பிள்ளை ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். அத்துடன் இவர் அந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞராகவும் அதேநேரம் ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக கப்பல் போக்குவரத்தையும் மேற்கொண்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்ற அடையாளத்துடன் இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


தந்தை பெரியார்


மதம் மனிதனை மிருகமாக்கும்

சாதி மனிதனை சாக்கடையாக்கும்!!


இக்கூற்றை கூறியவர் தந்தை பெரியார் ஆகும். இவர் ஒரு அரசியல்வாதியாகவும் சமுகசீர்திருத்த வாதியாகவும் இருந்துள்ளார். இவர் 1879 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி  வெங்கட்ட நாயக்கர் மற்றும் சின்னத்தாயம்மைக்கும் மகனாக தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் .வெ.ராமசாமி என்பதாகும்.

இவர் வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டதாக இருந்தார். சிறிய வயதிலேயே திராவிடத்தை அடக்கியாண்ட ஆரியத்தை பற்றி பல கேள்விகளை எழுப்பினார். தனது 19-வது வயதில் நாகம்மையை திருமணம்  செய்தார்.

இவர் பல கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்ததுடன் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமின்றி மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார்.அதுமட்டுமின்றி தமிழகத்தின் மிக முக்கியமாக கருதப்படும் திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர். மற்றும் சாதிமத பிரிவின்றி அனைவருடனும்  சமமாகப் பழகி வந்தார்மகாத்மா காந்தியின் கொள்கையைப் பின்பற்றி வந்தார்மேலும் கீழ்சாதி, மேல்சாதி அனைவரும் கோவிலுக்குள் நுழையலாம் என்று வாதிட்டவர்.


பெண் பாலினர்களுக்கு எல்லாத்துறையிலும் சம உரிமை வழங்க வேண்டும் என போராடினார். சாதி வேற்றுமை பாராமல் திருமணங்களை நடத்தி வைத்தார். விதவைகளுக்கு மறுமணம் செய்யலாம் என்றும் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார்.


ஒரு காலகட்டத்தில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து போராட்டம் செய்தார். இதன் விளைவாக சிறையில் இருந்து இறுதியில் வெற்றியும் கண்டார்.இதன் பின்னர் இவர் திராவிட கழகத்தை உருவாக்கினார்இதில்  அவரது பொதுவான கொள்கைகள் ஆன மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம்ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயற்பாடுகளிலும் இவர் ஈடுபட்டு வந்தார்

 இவருடைய கடைசி கூட்டமானது சாதி முறைமையும்இழிவு நிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடவேண்டும் என்று  தனது கடைசி உரையை முடித்துக் கொண்டார். பின் இவர் 1973 டிசம்பர் 24ஆம் திகதி தனது 94வது வயதில் காலமானார். உலகில் மாபெரும் சிந்தனையாளர்பகுத்தறிவாளரான இவர்  'பகுத்தறிவு பகலவன்', 'வைக்கம் வீரன்' , 'தந்தை பெரியார்' என்று பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்பட்டார். இவருக்கு யுனெஸ்கோவால் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டு அரசு தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இம்மாபெரும் பகுத்தறிவாளன் எமக்கு சரியான உண்மையான விடயங்களை இக்கால சந்ததியினருக்கு  கூறியுள்ளார்.

“கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்  “


என்று அழகாக கூறி சென்றுள்ளார் தந்தை பெரியார் அவர்கள்.






Comments